Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சர்க்கரை உற்பத்தி 4 மடங்காக உயர்வு

சர்க்கரை உற்பத்தி 4 மடங்காக உயர்வு

தமிழகத்தைப் பொறுத்தவரை, நடப்புப் பருவத்தில் நவம்பர் 5 வரை 64,000 டன் சர்க்கரை உற்பத்தியாகியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கரும்பு அரவை முன்கூட்டியே தொடங்கியதால், இந்தியாவில் நவம்பர் 5 வரை 12.85 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகியுள்ளது.

இந்தியாவில் சர்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு கடந்த அக்டோபரில் தொடங்கியது. இந்த ஆண்டில், மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பு அரவை முன்கூட்டியே தொடங்கியதும், சர்க்கரை உற்பத்தி செய்யும் பிற முக்கிய மாநிலங்களில் ஆலைகள் படிப்படியாக அரவையைத் தொடங்கியதும் உற்பத்தி உயர்வுக்குக் காரணம் என்று இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் (இஸ்மா) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சந்தைப்படுத்தல் ஆண்டில் நவம்பர் 5-ம் தேதி வரை நாடு முழுவதும் 3.20 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அப்போது 154 ஆலைகள் கரும்பு அரவையைத் தொடங்கியிருந்தன. நடப்பு ஆண்டில் நவம்பர் 5 நிலவரப்படி 184 ஆலைகள் அரவையைத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கூடுதலாக 30 ஆலைகள் அரவையைத் தொடங்கியுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 136 சர்க்கரை ஆலைகள் அரவையைத் தொடங்கியுள்ளன. இவை நவம்பர் 5 வரை 10.78 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் அந்த மாநிலத்தில் 101 ஆலைகள் அரவையைத் தொடங்கியிருந்தன. அப்போது மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி 1.23 லட்சம் டன்னாக இருந்தது. நடப்புப் பருவத்தில் இதுவரை நாட்டில் உற்பத்தியான சர்க்கரையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு மகாராஷ்டிரத்திலிருந்து வந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, நடப்புப் பருவத்தில் நவம்பர் 5 வரை 64,000 டன் சர்க்கரை உற்பத்தியாகியுள்ளது. சிறப்புப் பருவத்திலிருந்து தொடர்ந்து கரும்பு அரவையில் ஈடுபட்டுள்ள 7 ஆலைகள் இந்த உற்பத்தியைப் பதிவு செய்துள்ளதாக இஸ்மா தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் 19 ஆலைகள் கரும்பு அரவையைத் தொடங்கியுள்ளன. இந்த ஆலைகள் இதுவரை 20 ஆயிரம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளன. மேற்கு உத்தர பிரதேசத்தில் இன்னும் அரவையைத் தொடங்காத ஆலைகளில் பெரும்பாலானவை அடுத்த ஓரிரு நாள்களில் பணிகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உத்தர பிரதேசத்தில் எஞ்சியுள்ள ஆலைகள் தீபாவளிப் பண்டிகை முடிந்தவுடன் அரவையைத் தொடங்கும் என இஸ்மா தெரிவித்துள்ளது.

கடந்த பருவத்திலிருந்து சுமார் 36 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் உள்ளது. இந்தக் கையிருப்புடன் புதிய பருவத்தின் உற்பத்தியும் வேகமெடுத்து வருவதால், நாட்டின் சர்க்கரைத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இருக்கும் என்று இஸ்மா தலைமை இயக்குநர் தீபக் பலானி தெரிவித்தார்.

உள்நாட்டு நுகர்வுக்குப் போதுமான சர்க்கரை தற்போது இருப்பதாகவும், உள்நாட்டுச் சந்தையில் தேவையான அளவு சர்க்கரை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் ஆலைத் துறையினர் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி
தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
அடுத்த செய்தி
Diwali Special Trains between Podanur and Barauni

தொடர்புடைய செய்திகள்